Travel the world
Climb the mountains
Post Page Advertisement [Top]
மனிதர்களுடைய மூளைப் பகுதியை ‘பிராணன்' என்ற வாயுவும், ‘தர்ப்பகம்' என்ற கபமும் தம் செயல்களின் மூலம் அறிவு, புலன்கள், நாடிகள் எனப்படும் நரம்பு மண்டலங்கள் இவற்றை நிலைநிறுத்தச் செய்கின்றன. இந்த இரு தோஷங்களின் சீற்றம், மூளையைச் சார்ந்த நரம்பு மண்டலங்களையும் அங்கிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் திரவக் கசிவுகளையும் பாதிப்படையும் வகையில் தாக்குவதால், உடல் அசைவுகள் மந்தமாகுதல், விரைப்பு, தன்னிச்சையாக கைகள் நடுங்குதல், கைகளில் வலுவற்ற தன்மை போன்ற அறிகுறிகள் தென்படும்.
மேலும் முகத்தைச் சார்ந்த தசைகள் அசைவற்று, கண்களை மூட முடியாமல், வாயிலிருந்து எச்சில் வடிந்து கொண்டிருக்கும் உபாதைகளும் காணத் தொடங்கும். நடக்கும்போது உடல் முன்னோக்கி வளைவதும், குறுகிய தள்ளாட்டத்துடன் கூடிய தடுமாற்றங்களும் ஏற்படும். சிலருக்குத் தரையில் ஒரு குச்சி அல்லது கம்பு ஒன்றைப் போட்டுத் தாண்டச் சொன்னால், அதைத் தாண்டியவுடன் நடை சீராக, தடுமாற்றம் குறைந்து சிறிது தூரம் வேகமாகவும் நடப்பார்கள்.
வாதத்திற்கும் கபத்திற்கும் சமமான குணம் ‘சீதம்' எனப்படும் குளிர்ச்சி மட்டும்தான். மற்ற குணங்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று சேராதவை. அதனால் குளிர்ச்சி எனும் குணத்தைக் கொண்ட உணவு வகைகளாலும், செயல்களாலும் பருவ காலத்தினாலும் இந்த நோயின் தாக்கம் எளிதில் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
* தலையில் அடிக்கடி குளிர்ந்த நீரை விட்டுக் குளித்தல்
* அப்படி குளித்தபிறகு தலையைச் சரியாக துடைத்துக் கொள்ளாமல் தலைமுடியை வாரிக் கொள்ளுதல்
* தேங்காய் எண்ணையைத் தலையில் தேய்த்துக் கொண்டு, காலையில் இளம் வெயில் அல்லது விடிகாலையில் நடைப்பயிற்சி செய்தல்
* தூங்கும்போது அதிக அளவில் ஏசியை வைத்துக் கொள்ளுதல்
* தலைப்பகுதியில் டேபிள் மின்விசிறியின் காற்று படும்படி படுத்துக் கொள்ளுதல்
* இரவில் படுக்கும் முன் குளிர்ந்த நீரைப் பருகுதல்
* குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து சில்லிட்டுப் போன பழங்கள், பழ ரசங்கள், பானங்கள், ஐஸ்கிரீம் போன்றவற்றை எடுத்து அடிக்கடி சாப்பிடுதல்
* சில்லிட்டுள்ள தரையில் கால் பாதங்களை வைத்திருத்தல்
* உடல் வியர்த்துள்ள நிலையில், ஐஸ் தண்ணீரைப் பருகுதல்
* உணவில் குளிர்ச்சியான வீர்யத்தைக் கொண்ட வெள்ளரிக்காய், பூசணிக்காய், புடலங்காய், வெண்டைக்காய் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிடுதல்
* தவறான விதத்தில் யோகாசனப்பயிற்சி, உடற்பயிற்சிகளில் ஈடுபடுதல்
போன்ற சில காரணங்களால் தலையைச் சார்ந்த வாத - கப தோஷங்கள் சீற்றமடைந்து நரம்புகளை வலுவிழக்கச் செய்கின்றன.
இந்நோய்க்கு ஆயுர்வேத சிகிச்சைகள் பல உள்ளன. மூக்கினுள் மூலிகைத் தைலத்தை விடுதல், காதுகளில் எண்ணெய் நிரப்புதல், முகத்தில் மூலிகைத் தைலத்தைத் தடவி, பூண்டு வேகவைத்த சூடான பாலிலிருந்து வரும் ஆவியை முகத்தில் படும்படி செய்தல், தலையில் எண்ணைய்யை நிரப்பி ஊறவிடுதல், குடலுக்கு நெய்ப்புத் தரும் விளக்கெண்ணெயைப் பருகச் செய்து மலம் கழிக்க வைத்து அதன் பிறகு ஆசனவாய் வழியாக மூலிகைத் தைலம் மற்றும் கஷாயங்களைச் செலுத்தி குடலில் தேங்கியுள்ள வாயுவை வெளியேற்றுதல், உடல் சுத்தி முறைகள் அனைத்தையும் செய்த பிறகு, மூளைத் திசுக்கள், நரம்புகள் வலுப்படும் வகையில் மூலிகைக் கஷாயங்களைப் பாலுடன் கலந்து பருகுதல் போன்றவை சிகிச்சை முறைகளாகும்.
விதார்யாதி கிருதம், தசமூல ரசாயனம், அஸ்வகந்தாரிஷ்டம், தலைக்கு க்ஷீரபலா தைலம் போன்ற சிறப்பான மருந்துகளை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட்டு வருவதன் மூலமாக, பார்கின்ஸானிஸம் எனும் கடுமையான உடல் உபாதையின் தாக்கத்தை நன்றாகக் குறைக்க முடியும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment